நீங்க தூங்கும் நேரம் குறைந்தால் இதயநோய் தாக்கும்- எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

நாள்தோறும் 7 மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குவதால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவில் வாழும் 44 வயது முதல் 62 வரை வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் கொலராடோ பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பங்கேற்பாளர்களின் தூங்கும் நேரம் குறித்த விவரங்களும் அவர்களின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ரத்தத்தில் உள்ள மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் எனும் நுண்ணணுக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டது. மக்களால் அதிகம் அறியப்படாத இந்த ஆர்.என்.ஏ.க்கள் வீக்கக் கட்டுப்பாடு, நோய்த் தடுப்பாற்றல், இரத்தக் குழாய்களின் பாதுகாப்பு – ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இதனால் இந்த ஆய்வில் இரத்தத்தில் உள்ள 9 வகை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்களின் எண்ணிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

ஆய்வின் முடிவில், தினமும் 7 மணி நேரம் முதல் எட்டரை மணி நேரம் வரை தூங்கக் கூடியவர்களின் ரத்தத்தில் உள்ள 125ஏ, 126, 146ஏ – ஆகிய மைக்ரோ ஆர்.என்.ஏ.க்களின் அளவு நல்ல நிலையில் இருக்க, 5 முதல் 6 மணி நேரம் வரை தூங்கக் கூடியவர்களின் ரத்தத்தில் உள்ள மைக்ரோ ஆர்.என்.ஏ.க்களின் அளவோ 40% முதல் 60% குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து நிறைவான தூக்கம் என்பது உடலின் ஒட்டுமொத்த இயக்கம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பாதுகாக்கக் கூடியது என்பதும், குறைவான தூக்கம் என்பது இதய நோய்களுக்கு மனிதர்களை இலக்காக்கக் கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை புற்றுநோயால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது. மனிதர்களை திடீரெனத் தாக்கிக் கொல்லும் இருதய நோய்களை முறையான தூக்கம் மட்டுமே கட்டுப்படுத்தும் எனும்போது 7 மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்குவது தீங்கை விலை கொடுத்து வாங்குவதைப் போன்றதுதான்.

நோய்த்தடுப்பாற்றலைப் போல, நினைவாற்றையும் முறையான தூக்கம் அதிகரிக்கும். எனவே முறையான தூக்கமே உடல்நலம், மனநலம் – ஆகிய இரண்டையும் தீர்மானிப்பதாக உள்ளது. தூக்கத்தைக் குறைப்பது என்பது ஆயுளைக் குறைத்துக் கொள்வது என்பதால், 7 மணி நேர தூக்கத்தை அலட்சியம் செய்யாமல் இருப்போம், உடல் நலம் காப்போம்.

Exit mobile version