நித்தியானந்தா ஆசிரமத்தில், சட்டவிரோதமாக காவலில் உள்ள தனது மகனை மீட்கக் கோரி தாயார் அளித்த புகாரில், அவரது மகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
கடந்த 2003 ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் முருகானந்தம் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக முருகானந்தத்தை காண ஆசிரம ஊழியர்கள் அனுமதி மறுப்பதால், தனது மகனை மீட்கக் கோரி, முருகானந்தத்தின் தாயார் அங்கு லக்ஷ்மி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜரான முருகானந்தத்திடம், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முருகானந்தம் தனது விருப்பத்தின் பேரிலேயே நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், தன்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார். முருகானந்தத்தின் இத்தகைய வாக்கு மூலத்தால், நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.