ஹைட்ரோ கார்பன் திட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களின் கருத்துகளை கேட்கத் தேவையில்லை என்ற புதிய முடிவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும், அந்தப் பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்ததை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளதை கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார். இதனால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த, சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்பதற்கு விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், விவசாயிகளின் நலன் காக்க தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் துறை அறிவிக்கை அனுப்பும் முன், தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், சுற்றுச்சூழல் துறை அறிக்கை குறித்து தமிழக அரசின் கருத்துகளை கேட்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, மக்கள் கருத்துகளை கேட்க வேண்டாம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version