யாஸ் புயல் காரணமாக ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களின் பத்துக்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
வங்க கடலில் உருவான “யாஸ்” புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
புயல் கரையை கடந்தபோது ஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது. ஒருசில இடங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. பலத்த காற்றால், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பல்வேறு பொருட்கள் உடைந்து சேதமாகின. பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டது. புயல் கரையை கடந்த மறுநொடியே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் இறங்கினர்.
யாஸ் புயலால், மேற்கு வங்க மாநிலத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மிட்னாபூரில் வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வந்தனர். மாநிலத்தில் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3 லட்சம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்ட 134 தடுப்புகள் உடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிவாரண பணிகளுக்காக முதல்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.