சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஹுமாயூன் மஹால். 1768 ஆம் ஆண்டு இந்தோசராசனிக் கட்டட அமைப்பில் கட்டப்பட்ட இந்த மாஹால் ஆங்கிலேயர் காலத்தில் வருவாய் அலுவலகமாக பயன்படுத்தபட்டு வந்தது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் பெருமளவு சேதமடைந்தது. இதனை மீட்டெடுக்க வேண்டுமென பொதுப்பணித்துறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று பழமை மாறாமல் இந்த கட்டிடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்காக 34 கோடி ரூபாய் ஒதுக்கியது.
பழமை மாறாமல் அதே தரத்துடன் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதால், தமிழகத்தின் பகுதிகளுக்கு பல்வேறு சென்று பாரம்பரியமிக்க கட்டடங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்க சுண்ணாம்பு பூச்சு கலவை தயாரிக்கும் பொருட்களை பொதுப்பணித்துறையினர் கண்டறிந்தனர்.
இந்த காலத்தில் பூச்சுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சுண்ணாம்பு பூச்சு கலைவை நூறு சதவிகிதம் தரமிக்கதாகவும் இதற்கான ஆயுள் கணக்கிட முடியாதவை எனவும் பல்வேறு ஆய்வுகள் செய்து உறுதித் தன்மையை கண்டறிந்த பிறகே இந்த பணி மேற்கொள்ளப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமால் மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறுகின்றனர்.
ரோதைக் கல் மூலம் சுண்ணாம்பு பூச்சு தயாரிப்பதற்கு தேவைப்படக்கூடிய கருங்கற்கள் மாமல்லபுரத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பணிக்கென்றே பழக்கப்பட்ட ஆரோக்கியமான இளம் காங்கேயம் காளை கொண்டு வரப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 20 சுற்றுகளுக்கு 5 மூட்டை சுண்ணாம்பு கலவைகள் தயாரிக்கப்பட்டு ஹுமாயூன் மஹாலை புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாரம்பரிய கட்டிட முறைகள் தற்போதைய தலைமுறையோடு அழிந்துவிடமால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு சான்றாக கட்டிடங்களை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சுண்ணாம்பு கலவை பூச்சு முறையை மீண்டும் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.