மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் உள்பட 36 பேரிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண் உதவித்தொகை திட்டமான, கிசான் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் என 36 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், வேளாண் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
மேலும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பெயரில், முறைகேடாக உதவித்தொகைப் பெற்றது குறித்தும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கிசான் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்பட்ட ரூ.6,40,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன், கிசான் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்பட்ட 3 லட்சம் ரூபாய், ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது 366 போலி நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.6,40,000 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.