வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
குடியாத்தம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது உணவு தேடி வரும் சிறுத்தைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை கொன்று இழுத்துச் செல்வதும் வழக்கம், ஆனால் நேற்று நள்ளிரவு கால்நடைகள் எதுவும் சிக்காத நிலையில் கலர்பாளையத்தில், உள்ள வேலாயுதம் என்பவரது வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்துள்ளது. காற்றுக்காக திறந்து வைக்கப்பட்ட கதவில் சிறுத்தைத நுழையும் என்று சற்றும் எதிர்பாராத வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினர், சிறுத்தையிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
ஆனால் கிடைத்த சில நிமிடங்களில் வேலாயுதத்தின் மனைவி பிரேமா, மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை தாக்கியது. இதையடுத்து அலறியடித்து கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அந்த நிலையிலும் சாதுரியமாக சிந்தித்த அவர்கள் சிறுத்தையை வீட்டில் வைத்து பூட்டினர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சிறுத்தை அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.
சிறுத்தை வீட்டில் சிறைபட்ட தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் கலர்பாளையத்திற்கு விரைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து வரவழைக்கப்பட்ட மயக்க ஊசி நிபுணர்கள் வீட்டின் சுவர் வழியே துளைப்போட்டு களைப்பாக இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் மயங்கிய சிறுத்தையை, மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அதன் பின் கூண்டில் அடைத்தனர். பின்னர் கூண்டை துணியால் மூடி அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்
கோடைகாரணமாக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி இருக்கிறன. கடந்த சில நாட்களுக்கு முன் குடியாத்தம் அருகே வனத்தில் இருந்து வந்த யானைகள் பயிர்களை நாசம் செய்து சென்றன. இந்த நிலையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்த ஆட்டம் போட்டு இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.