பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஓசூர் பகுதி விவசாயிகள், வெளிநாட்டிலிருந்து கள்ளச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பட்டினை தடை செய்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள கூலி அக்ரஹாரம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
100 பட்டுப்புழுக்களை 3,400 ரூபாய் என தனியாரிடம் இருந்து பெற்று வரும் விவசாயிகள் அவற்றை தனி அறையில் வைத்து மல்பெரி இலைக்கொண்டு வளர்க்கின்றனர். புழுக்கள் தங்களின் வளர்ச்சி காலத்தின் ஐந்தாம் பருவத்தில் உணவு உண்பதை நிறுத்தி விட்டு கூடு கட்டும். அவ்வாறு புழுக்கள் கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்து தரம் பிரிக்கின்றனர்.
இவ்வாறு கூலி அக்ரஹார கிராம மக்கள் 2006 முதல் 2016 ஆண்டு வரை பட்டு வளர்ப்பில் ஆர்வம் செலுத்தியதில், ஒட்டுமொத்த கிராமமே வருவாய் ஈட்டி நல்ல வளர்ச்சியை அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
அதுவரை ஒரு கிலோ பட்டுக் கூடு 550 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கிலோ 250 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கள்ளத்தனமாக ஜப்பான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து தரம் குறைந்த பட்டு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதே இதற்கு காரணம். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற பட்டினை வாங்க ஆர்வம் குறைந்ததும் விலை வீழ்ச்சிக்கான காரணம் என சொல்லப்படுகிறது.
பட்டு வளர்ப்பில், ஓசூர் பகுதியில் 3,800 ஏக்கரில் 2000 விவசாயிகளும், தேன்கனிக்கோட்டை பகுதியில் 1500 ஏக்கரில் 1000 விவசாயிகளும் பட்டு வளர்ப்பில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சந்தை மூலமாக இறக்குமதி செய்யப்படும் பட்டுவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.
பட்டு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு வெளிநாட்டு பட்டினை தடை செய்து, நேரடியாக அரசே கிராமங்களில் இருந்து பட்டினை கொள்முதல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.