ஆந்திராவில் வேறு சமூகத்தினருடன் திருமணம் ஆனதால், பெண் அடித்துக் கொலை

வேறு சமூகத்தை சேர்ந்தவருடன் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் தாயை அடித்து ஆணவக் கொலை செய்திருக்கும் சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த உசிரிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்த ஹேமாவதி, கேசவலு ஆகியோர் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கேசவலு வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரையும் ஹேமாவதி குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் தங்களுக்கு பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து கேசவலு, ஹேமாவதி ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, வழிமறித்த ஹேமாவதியின் பெற்றோர் இருவரையும் கடுமையாக தாக்கினர். கொடூரமாக தாக்கப்பட்ட ஹேமாவதி, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து ஹேமாவதியின் வீட்டிற்கு சென்ற கேசவலுவின் பெற்றோர், குழந்தையை மீட்டு வீட்டிற்கு தீவைத்தனர். ஆணவக் கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆந்திரா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version