ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல் – அதானி குழுமம் அறிக்கை!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையினால் அதானி குழுமம் சரிவினைக் கண்டுள்ளது. நாடு முழுவதும் இதுதான் தற்போது பேச்சுப்பொருளாக உள்ளது. இவர்களின் அறிக்கையினால் உலக பணக்காரர் வரிசையில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி தற்போது 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் மையச்சரடு, அதானி குழுமம் தனது மதிப்பினை பங்குசந்தையில் உயர்த்திக்காட்டுவதற்காக பொய்யான கணக்கு வழக்கு போன்ற பல மோசடிகளை செய்து வந்துள்ளது என்று அவர்களின் அறிக்கை சொல்கிறது. இதன் காரணமாக அதானி குழுமம் இரண்டு நாட்களில் 2.47 லட்சம் கோடி இழப்பினை சந்தித்தது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு அவதூறு மற்றும் பொய்யானது என்று அதானி குழுமத்தின் தரப்பிலிருந்து 413 பக்க அறிக்கை ஒன்று நேற்று ஞாயிறு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சமானது,  ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டானது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் அல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவின் மீதான தாக்குதல் மற்றும் இந்திய ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை, வளர்ச்சிக்கான பாதையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும் என்று அக்குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதாரத்தை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிடவில்லை. அவர்கள் அறிக்கையில்  கேட்ட 88 கேள்விகளில் 65 கேள்விகளுக்கு அதன் அமைப்பு சார்ந்து உரிய பதில் அளித்துவிட்டோம் என்றும் மீதமுள்ள 23 கேள்விகளில் 18 கேள்விகள் எங்கள் குழுமத்தைச் சாராத பங்குதாரர்கள் பற்றியது, தவிர உள்ள 5 கேள்விகள் கற்பனையானது மற்றும் புனைந்து கேட்கப்பட்ட அடிப்படைத் தன்மையற்ற தேவையில்லாத கேள்வியாகும் என்று அதானி குழுமத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version