இமய மலையில் உள்ள பனிப்பாறைகளின் உருகும் வேகம் 2 மடங்காக அதிகரித்துவிட்டதாக செயற்கைக்கோள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆசிய கண்டத்தில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வு ஆதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. இதுகுறித்த சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.
1975-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் படம், 2000-ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம், தற்போதைய செயற்கைக்கோள் படங்கள் ஆகியவை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் 1975ல் இமயமலையில் இருந்த மொத்தப் பனிப்பாறைகளில் 28 சதவீத பாறைகள் இப்போது இல்லை என சயின் அட்வான் இதழ் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. மேலும் 650 மிகப்பெரிய பனிப்பாறைகள் இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிட்டன என்றும், 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிதாகத் பாறைகள் தெரிகிறது என்றும் அடுத்தடுத்து முடிவுகளை வெளியிட்டு பீதியைக் கிளப்பியிருக்கிறது.
அந்த ஆய்வுகளின் படி, 1975-ல் இருந்த பனிப்பாறைகளில் 87 சதவீதம் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்தது என்றும், 2016 ஆம் ஆண்டில் இது 72 சதவீதமாக குறைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இமயமலையில் பனி உருகும் வேகம் 2 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
பல்வேறு வற்றாத ஜீவநதிகளின் தாயகமாக உள்ள இமயமலை வற்றினால் அது, ஆசியக்கண்டத்தில் உள்ள 80-கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீரையும் வாழ்வாதாரத்தையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு – இவற்றால் ஏற்படும் புகையே இமயமலை பனிப்பாறைகள் உருகுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே மாற்று எரிபொருளுக்கான தேவை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எரிபொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்களாகிய நாம் முடிந்தவரை, அவற்றை தவிர்த்து நச்சுப்புகை உருவாகாமல் தடுக்க உதவ வேண்டும். இல்லையென்றால், அடுத்த நூற்றாண்டில், இமயமலையில் பனிப் பாறைகளே இருக்காது!