ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்றும், ஜனவரி 21ம் தேதிவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வெளியாகும் முன்பே வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவு நகல் கிடைத்தது எப்படி என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்று கூறினர். ஜனவரி 21-ம் தேதிவரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மார்ச் 14-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Exit mobile version