சேலம் மாவட்டத்தில் ஏரி நீர் புகுந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த அதிக அளவிலான மழையால் ஏரி நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. முந்நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். திடீரெனத் தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததால் செய்வதறியாது திகைத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேர முயற்சிக்குப் பின் நீர்வழிப் பாதை அடைக்கப்பட்டு, தண்ணீர் ஏரிக்குள் திருப்பி விடப்பட்டது. தற்போது வெள்ளம் புகுந்த இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.