பண்டைய காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த புறா இனமானது தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் பறவை இனமாகிவிட்டது. புறா இனத்தை அழியாமல் இன்றளவும் வளர்த்து வருகிறார் இளைஞர் ஒருவர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காண்போம்.
வாட்ஸ்அப், ஈ.மெயில் போன்ற நவீன தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு முன்னோடி புறாக்கள்தான். சங்க காலங்களில் காதலுக்குத் தூது செல்வது முதல்… போருக்கான அறிவிப்பைச் சொல்வது வரை அனைத்துக்கும் புறாக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட புறா வளர்ப்பு இன்றளவும் தொடர்கிறது. அழகுக்காக, இறைச்சிக்காக, பந்தயத்துக்காக என புறா வளர்க்கப்படுகிறது.
வீட்டின் மாடியில் அழகுப் புறாக்களையும், பந்தயப் புறாக்களையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகிறார், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஜெயமணி, 8 ஆம் வகுப்பில் புறா வளர்ப்பில் ஆர்வம் கொண்ட ஜெயமணி காலபோக்கில் அதிக அளவில் சவடால் புறா, கொண்டை புறா, ரோமர் புறா, மாடப்புறா உள்ளிட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
காலை, மாலை நேரங்களில் புறாக்களுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்து தனது வீட்டின் மாடியில் கூண்டு அமைத்து பாதுகாத்து வருகிறார். இவற்றை பார்க்க அருகில் உள்ள கிராமத்தினர் அதிக அளவில் வருவதுடன், இறைச்சிக்காக விலைக்கு வாங்கியும் செல்வதாக கூறுகிறார் ஜெயமணி. ஒரு ஜோடி புறாக்கள் 300 ரூபாய் முதல் விற்பனை செய்வதாக கூறுகிறார்.
புறாக் கூண்டுகள் அமைப்பதில் முக்கிய கவனம் தேவை என கூறும் ஜெயமணி, உயரமான இடத்தில் கூண்டுகள் இருக்க வேண்டும் என்கிறார். கூண்டுக்கு வெளியே, கொஞ்சம் வைக்கோல் வைத்துவிட்டால் போதும், புறாக்கள் தங்களுக்குத் தேவையான மெத்தை போன்ற இருக்கையை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார்.
காலத்தின் சுழற்சியில் நம் பொழுதுபோக்கை மாற்றிக் கொண்டே செல்கிறோம். ஆனால், எப்போதும் மாறாத, ரசனையின் எங்கோ ஒரு இடத்தில் ஆதி அடையாளமாக இயற்கை இருக்கத்தான் செய்கிறது.