சீர்காழி அடுத்த கேவரோடை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கேவரோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு கற்பிக்க இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக பள்ளியின் சுவர், ஜன்னல் என அனைத்திலும் ஓவியங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ரோபோ குறித்த ஒரு உரையாடலை மிக சரளமாக ஆங்கிலத்திலத்தில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்களின் உரையாடலை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்றால் தனியார் பள்ளியைத்தான் நாட வேண்டும் என்ற பிம்பத்தை கேவரோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உடைத்தெறிந்துள்ளது.