சென்னையில் உதவி பேராசிரியருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் அரசு ஆய்வக உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியர் பணியாற்றிய இவர், தற்போது நகலகக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கிண்டியில் உள்ள அரசு ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் வேலாயுதம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வேலை வாங்கி தருவதாக கூறி கார்த்திக்கிடம் 4 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற வேலாயுதம் அவரை ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
பணத்தை திருப்பித் தருமாறு கார்த்தி கேட்ட நிலையில், வேலாயுதத்தின் அழைப்பை ஏற்று முல்லை நகருக்கு, கார்த்திக் தனது மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு வேலாயுதம் சாய்பாபா பிரசாதம் என்று கூறி, சல்பியூரிக் ஆசிட் பவுடர் கலந்த பிரசாதத்தை கொடுத்துள்ளார். பிரசாதத்தை சாப்பிட்ட இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து வேலாயுதம் அங்கிருந்து தப்பியுள்ளார். பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கார்த்திக் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எம்கேபி நாகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், தலைமறைவாக இருந்த வேலாயுத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.