கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கிள்ளியூர் வாழபழஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 34 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த 11 ஆம் தேதி இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் எம்.ஏ பட்டதாரி பெண்ணான பிபிஷா (வயது22), ராஜேஷை அழைத்து தங்கள் வீட்டில் தொலைக்காட்சி தெரியவில்லை என கூறியுள்ளார்.
ராஜேஸ், பிபிஷாவிற்கு அண்ணன் முறை என்பதால் அவரை அழைத்துள்ளார். அதனை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வரும் படி கூறி உள்ளார்.
அப்போது தானே சரி செய்து தருவதாக கூறி பிபிஷாவின் வீட்டிற்கு சென்ற ராஜேஷ் திடீரென பிபிஷாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது பிபிஷா சத்தம் போட்டு அலறியதால், அங்கிருந்து ராஜேஷ் தப்பி சென்று தலைமறைவானார். பிபிஷாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பிபிஷாவின் வீட்டின் முன் குவிந்தனர்.
இதனை அவமானமாக கருதிய பிபிஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்தார். 60 சதவீத தீக்காயத்துடன் அவரை மீட்ட உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் சம்பவம் குறித்து பிபிஷாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புதுக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் ராஜேஷை கைது செய்ய எந்த நடவடிக்கைகளையும் போலீசார் எடுக்கவில்லை என பிபிஷாவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பிபிஷாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த 16 ஆம் தேதி நாகர்கோவில் மாஜிஸ்திரேட் மருத்துவமனைக்கு வந்து பிபிஷாவிடம் வாக்குமூலம் பெற்றார்.
இந்நிலையில் கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிபிஷா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பிபிஷாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறை உயர் அதிகாரிகள் வந்து பிபிஷாவின் உறவினர்களிடம் குற்றவாளி ராஜேஷ் தலைமறைவாக இருப்பதாகவும் விரைவில் அவரை கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து பிபிஷாவின் உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மரணம் அடைந்த பிபிஷா மற்றும் குற்றவாளி ராஜேஷ் இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பது குறிப்பிட தக்கது.