திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பொருட்களுக்கு சர்வதேச அளவிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
புவிசார் குறியீட்டிற்கான சட்டம் இந்தியாவில் 2003-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படும் அல்லது விளைவிக்கப்படும் பொருள் தனிச் சிறப்பு பெற்றிருந்தால் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் ஓவியங்கள், தலையாட்டி பொம்மை, மதுரை மல்லிகைப்பூ உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
அந்த வரிசையில் தற்போது 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திண்டுக்கல் பூட்டுக்கும், 200 ஆண்டுகாலமாக காரைக்குடி பகுதி கைத்தறி நெசவாளர்கள், கை வண்ணத்தில் உருவாகும் கண்டாங்கிச் சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிக வாய்ப்புகள் உருவாகும் என உற்பத்தியாளர்களும் வணிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.