மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை உறுதி செய்வார்கள்..மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல – கூட்டணிக் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் கருத்து..!

பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று சேலம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், இன்று காலை சேலம் அண்ணா பூங்காவில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கும், புரட்சித் தலைவி ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிரூபர்களின் கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்தார்.

பொதுச்செயலாளரின் பதில்கள் :

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தலைவர்களான மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர்தான். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம்.  இன்னொன்று என்னவென்றால் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை.

மேலும் எங்களுக்கு சோதனைகள் எல்லாம் பக்குவப்பட்டுவிட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியை துவங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுக சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறும் என்று அவர் நிரூபர்களிடம் பேசினார்.

Exit mobile version