தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழகம்: "ஃபாக்ஸ்கான்" ஜாஸ் பால்கர்

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற ஃபாக்ஸ்கான் இந்தியா மேலாண் இயக்குநர் ஜாஸ் பால்கர், தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலம் எனவும், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே திருப்பெரும்புதூரில் 2007ம் ஆண்டு முதல் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்தத் தொழிற்சாலையில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. சுமார் எட்டாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் தொண்ணூறு விழுக்காடு பெண்கள்.

நோக்கியா தொழிற்சாலைக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. 2014 ஆம் ஆண்டு நவம்பரில் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து, டிசம்பரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் மூடப்பட்டது.

தமிழகத்தின் தொழில் முன்னேற்றம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்காக இந்தத் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்குத் தமிழக அரசு ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க தொழில்முனைவோரை சந்தித்துப் பேசினார். கூட்டத்தில் பேசிய ஃபாக்ஸ்கான் இந்தியா மேலாண் இயக்குநர் ஜாஸ் பால்கர், தமிழகம் தொழில்தொடங்க உகந்த மாநிலம் எனவும், பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைந்த மாநிலம் எனவும் தெரிவித்தார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனரும், தலைவருமான டெரி கோ இந்த ஆண்டு இறுதியில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி இந்தியாவில் தொடங்கும் எனக் ஏற்கெனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை திறக்கப்பட்டால் பத்தாயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புக் கிடைப்பதுடன் மறைமுகமாகச் சில ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version