ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை முறைகேடு: முன்னாள் குருக்கள் ராஜப்பா கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து பலரை கைது செய்துள்ளது. இந்தநிலையில், இக்கோயிலில் பணிபுரிந்த முன்னாள் குருக்கள் ராஜப்பா தேடப்பட்டு வந்தார். அவர் வெளிநாட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்தியாவுக்குள் வந்தால் ராஜப்பா குருக்களை கைது செய்யும்படி குடியுரிமை அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கனடாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version