மாற்றுத்திறனாளியின் இடத்தை ஆக்கிரமித்து, ஹோட்டல் நடத்தி வரும் திமுக முன்னாள் கவுன்சிலர்

சிறிய கடை ஒன்றை நடத்திவந்த மாற்று திறனாளியின் இடத்தை ஆக்கிரமித்து, வயிற்றில் அடித்து வருகிறார் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையத்தில், அரசு அனுமதியுடன் 15 ஆண்டுகளுக்கு மேல், கந்தன் என்ற மாற்றுத்திறனாளி டெலிபோன் பூத் நடத்தி வந்திருக்கிறார். இவர் இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பில் இருந்த நிலையில் இவரது கடையை ஒட்டி திமுக பிரமுகரும், முன்னாள் திமுக வார்டு கவுன்சிலருமான குமார் ஆக்கிரமிப்பு செய்து ஹோட்டல் நடத்தி வருகிறார்.

திமுக பிரமுகர் அரசியல் பலத்தாலும், அடாவடியாலும், மிரட்டி, கந்தனின் கடையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். திமுக கவுன்சிலரின் அச்சுறுத்தல் காரணமாக, பயந்து போன கந்தன் ஓர் ஆண்டாக கடையை திறக்க முடியாமல் இருந்திருக்கிறார்.

தனது குடும்ப சூழ்நிலையை கருதி நேற்று கடையை திறக்க முயன்ற போது திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான குமார் கந்தனையும், கந்தன் மனைவியையும், தனது அரசியல் பலத்தால் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் அடித்திருக்கிறார்.

தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கந்தன் மற்றும் அவரது மனைவி உயிர் பயத்தில் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதன் காரணமாக குறிஞ்சிப்பாடி காவல்நிலைய, காவல் ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Exit mobile version