மேட்டூரில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.பி. பார்த்திபன் உள்ளிட்ட 4 பேர் மீது, 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி வனச்சரக அலுவலர் திருமுருகன், அரசு புறம்போக்கு நிலத்தை தற்போதைய திமுக எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட சிலர் ஆக்கிரமித்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரியசாத்தப்பாடி கிராமத்தில் உள்ள வேடன்கரட்டில் வீடுகள் இல்லாத நிலையில் 167 மீட்டர் நீளத்துக்கு மலையைக் குடைந்து, 50 சென்ட் அளவுக்கு ஆக்ரமிப்பு செய்து, காட்டை அழித்து திமுகவினர் பாதை அமைத்துள்ளனர் என்றும், 2013 ஆம் ஆண்டு திமுக எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.ஆர்.பார்த்திபன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனது அலுவலகத்தை அப்பகுதியில் கட்டி, எதிர்த்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், அவரது சகோதரர் அசோக்குமார், அப்பகுதியில் வசிக்கும் அனந்த பத்மநாபன், காவலாளி பழனிசாமி ஆகியோர் மீது அரசு சொத்துக்களை திருடுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.