தேனி மாவட்டம் குரங்கணியில் அனுமதியின்றி மலையேற்றத்திற்கு சென்ற வெளிநாட்டினர், வனத்துறை அலுவலகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அனுமதி இன்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, குரங்கணியில் மலையேற்றம் செல்ல தடைவிதிக்கப்பட்டு கடும் கண்காணிப்பு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தடையை மீறி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற வெளிநாட்டினர் 6 பேரை பிடித்த போலீசார், போடி வன அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், வன அலுவலர்களை தள்ளி விட்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றனர்.
அவர்களை அனுமதியின்றி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ரவியை கைது செய்த வனத்துறையினர் காவல்துறை வசம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.