பிரிட்டனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், பட்டப்படிப்பு முடிந்தவுடன் இரண்டு ஆண்டுகள் பணியில் ஈடுபட விசா வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் 4 மாதங்கள் மட்டுமே பணியில் ஈடுபட அந்நாட்டு அரசு விசா வழங்கி வந்தது. இதன் காரணமாகவே வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கருதிய அந்நாட்டு அரசு, விசா வழங்குவதில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது.
அதன்படி, அடுத்த ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் 2 ஆண்டுகள் பணிபுரிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசின் இந்த முடிவிற்கு அந்நாட்டு பல்கலைக் கழகங்களும், வெளிநாட்டு மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.