அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.வங்கக்கடலையொட்டி நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஆந்திரா மற்றும் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version