விருதுநகர் மாவட்டத்தில் களைகட்டி வரும் பட்டாசு உற்பத்தி

விருதுநகர் மாவட்டத்தின் முதன்மையான தொழில்களில் ஒன்றாக, பட்டாசு தயாரிப்புத் தொழில் விளங்குகிறது. மழை இல்லாத வறண்ட கந்தக பூமியாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், விவசாயம் செய்வதற்கு வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு, பட்டாசுத் தொழிலே கைகொடுத்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலால் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் பட்டாசுத் தொழிலுக்கு ஆதாரமாக அமைவது, தீபாவளித் திருநாள். இந்தியாவில் தீபாவளிக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளில் 80 சதவீதம், சிவகாசி வட்டாரத்தில் தயாரிக்கப்படுகின்றன.

சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுத் தொழில் நடைபெறுகிறது. இங்குள்ள பல ஊர்களில், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

பட்டாசு தொழிலாளர்களை பொருத்தவரை, பொதுமக்களின் மகிழ்ச்சி ஒன்றையே பிரதானமாக கொண்டு உழைத்து வருகிறார்கள். பலதரப்பட்ட பட்டாசுகள் தயாரிக்கப்படும் நிலையில், எல்லோராலும் விரும்பப்படும் சர வெடிகள், உதிரியாக பேக்கிங் செய்யப்படுகிறது. 12, 28, 100, 500, 1000, 2000, 5000, 10,000 வாலா என பல்வேறு வகைகளிலும், பிரிவுகளிலும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு, கண்கவர் வண்ண அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இவை ஒவ்வொன்றும் தயாரிப்பதற்கு, தொழிலாளர்கள் படும் கஷ்டங்களும், அவர்களின் உழைப்பும், சொல்லிமாளாது. ஒரு நொடியில் கொளுத்திப் போடும் வெடிக்கு, குறைந்த பட்சம் அவர்களின் ஒருவார உழைப்பு தேவைப்படுகிறது.

பொதுமக்கள், அயல்நாட்டு பட்டாசுகளை வாங்காமல், தீபாவளி பண்டிகை அன்று, இவர்களின் கடின உழைப்பினால் உருவான பட்டாசுகளை வாங்கி, இவர்களுக்கு உதவினால், அவர்களும் தீபாவளி நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

Exit mobile version