உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நிதி தேவை – அருண் ஜெட்லியிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 3 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் அப்போது உடனிருந்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ஜெட்லியிடம், எஸ்.பி. வேலுமணி மனு அளித்தார். இந்த தொகையை வழங்கினால் தான் உள்ளாட்சித்துறைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான, வார்டுகள் வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் அருண் ஜெட்லியிடம் அளிக்கப்பட்ட மனுவில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version