93 பேரை கொலை செய்த முன்னாள் குத்துச் சண்டை வீரர்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்தவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் சாமுவேல் மெக்டவல். தற்போது 79 வயதாகும் இவர், கடந்த 2012 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போது அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இவர் 1987 முதல் 1989ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களைக் கொலை செய்தது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறையில் உள்ள சாமுவேல் மெக்டவல்லிடம் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. புலனாய்வுக்குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இதன் மூலம் கண்டுபிடிக்க முடியாத கொலைகள் வழக்குகள் குறித்த தகவல்களைத் திரட்ட முயற்சிக்கப்பட்டது.

இந்த விசாரணையில், பதற வைக்கும் விதமாக 1970 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 35 ஆண்டுகளில் 93 கொலைகளை செய்துள்ளதாக சாமுவேல் மெக்டவல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்களில் தனது நினைவில் உள்ள பெண்களின் உருவங்களை வரைந்தும் அவர் கொடுத்துள்ளார். இப்படிக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பினத்தவர்கள். பெரும்பாலும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களையே இவர் கொலை செய்துள்ளார்.

இந்த வாக்குமூலத்திற்குப் பின்னர், இந்தக் கொலைகளில் 50 கொலைகளைச் செய்தது சாமுவேல் மெக்டவல்தான் என்பதை எஃப்.பி.ஐ.யின் ஆய்வுகள் உறுதியாகி உள்ளன. மற்ற கொலைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக்கு அமெரிக்க மக்களின் ஒத்துழைப்பையும் எஃப்.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. சாமுவேல் மெக்டவலின் இந்தக் கொலைகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

Exit mobile version