திருச்சியில் மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2 பேரை விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் அதே பகுதியில் ஸ்ரீ சக்ராஆட்டோ மொபைல் நடத்தி வருகிறார். அதே நேரத்தில் அவரது மகன்களாக கார்த்திக் பிரபு மற்றும் அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் மாதாந்திர சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில், நூற்றுக்கணக்கானோர் பணம் கட்டி வந்துள்ள நிலையில், கட்டிய பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று பழனிவேல் மற்றும் அஜித்குமார் ஆகிர இருவரையும் திருச்சியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் விழுப்புரம் கொண்டு வந்த காவல்துறையினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் தப்பியோடிய கார்த்திக் பிரவை தீவிரமாக தேடி வரும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இவர்களிடம் சீட்டு கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் 04146-250366 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.