திண்டுக்கல்லில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தந்தை, மகன் கைது

கிராமம் கிராமமாக சென்று 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்னர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவர் அவ்வூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் பெட்டிகடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வீரமணிகண்டன் நேற்று வழக்கம்போல் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, தன் மகனுடன் காரில் வந்த நபர் ஒருவர் அவரது கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு மீதி பணம் வாங்குவதற்காக காத்திருந்தார். அந்த நபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கிய வீர மணிகண்டன், சந்தேகத்துடன் அதனை சோதனை செய்த போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இதையடுத்து கள்ளநோட்டை கொடுத்த அந்த நபரையும் அவருடனிருந்த சிறுவனையும் கையும், களவுமாக பிடித்து, நத்தம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு அவர்கள் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும் அவருடன் வந்த சிறுவன் அவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த கள்ளநோட்டு அவருக்கு எப்படி கிடைத்தது? என்று காவல் துறை நடத்திய விசாரணையில், பல பகுதிகளில் கள்ள நோட்டுகள் விற்பனை செய்யும் நபர்களிடம் 1 லட்ச ரூபாய் கொடுத்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டை வாங்கியுள்ளார். அதை இவர்கள் தமிழகத்தின் பல கிராம பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி மாற்றிவந்துள்ளனர்.

இதனையடுத்து, பெட்டி கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version