எறும்புகள் என்றாலே சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை. உலகில் உள்ள 12 ஆயிரம் வகை எறும்புகளில், எந்த எறும்பு வகை மிக வேகமாக நகரக் கூடியது? என்பதைப் பார்க்கலாம்…
உலகிலேயே மிக வேகமாக நகரும் எறும்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். சஹாரா பாலைவனத்தில் வாழும் சில்வர் எறும்புகள், ஒரு நொடியில் சுமார் 855 மில்லி மீட்டர் தூரத்தைக் கடக்கின்றன. இது மணிக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒப்பானது. ஆனாலும், இந்த தூரமானது அவற்றின் உடலின் நீளத்தைப் போல 108 மடங்கு அதிகம் ஆகும். எனவே இவற்றின் வேகம், 5 அடி உயரமுள்ள மனிதன் ஒரு நொடியில் 540 அடிகளைக் கடப்பதற்கும், ஒரு வீட்டுப் பூனை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவதற்கும் ஒப்பானது!
உலகில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எறும்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எறும்புகளின் சராசரி வேகம் நொடிக்கு 8 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சஹாராவின் சில்வர் எறும்புகள் சராசரியை விடவும் 100 மடங்குக்கு அதிக வேகமாக உள்ளன.
சஹாராவின் சில்வர் எறும்புகள் மிக வேகமாக நடக்கக் கூடியவை என்பது முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவற்றின் வேகம் என்ன என்று இதுவரை யாரும் அளந்தது கிடையாது. இந்நிலையில், ஜெர்மனியின் ULM பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த எறும்புகளின் நகர்வை கேமராவில் படம் பிடித்து, அந்த வீடியோவைக் கொண்டு இவற்றின் வேகத்தைக் கணக்கிட்டுள்ளனர்.
சஹாரா பாலைவனத்தின் கொடூர வெப்பத்தில் இருந்து இந்த வேகமே எறும்புகளைப் பாதுகாக்கின்றது. இவை ஒருநாளில் 10 நிமிடங்கள் மட்டுமே கூட்டைவிட்டு வெளியே வருகின்றன. அந்த நேரத்திற்குள்ளாகவே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த எறும்புகளின் சிறிய கால்களே இவற்றின் வேகத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இவற்றின் அனைத்து கால்களும் ஒரேசமயத்தில் தரையில் பதிவதே இல்லை. தவிர, இவை காற்றில் மிதந்து செல்லவும் கூடியவை. காற்றில் மிதக்கும் போது இவற்றின் வேகம் மணிக்கு 1.3 மீட்டர் ஆகும்…!