ஃபானி புயல் அபாயத்தையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 41 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதே சமயம் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தாழ்வான பகுதிகளிலிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதி தீவிர புயலாக உருவெடுத்திருக்கும் ஃபானி புயல், ஒடிசா மாநிலம் கோபல்பூர் மற்றும் சந்த்பாலி இடையே மே 3ஆம் தேதி கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக ஒடிசாவின் புரி, ஜாகாட்சிங்பூர், கேந்த்ராபாரா, பட்ராக், பாலசோர், மயூர்பஞ், கஜாபதி, கஞ்சம், கோர்தா, கடாக் மற்றும் ஜாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொவ்த், காலஹந்தி, சாம்பல்பூர், டியோகர் மற்றும் சுந்தர்கார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்திருப்பதால் அங்கு உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே அசாதாரண சூழலை சமாளிக்க ஒடிசாவில் 28 குழுக்களும், ஆந்திராவில் 8 குழுக்களும், மேற்கு வங்கத்தில் 5 குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பரப்பிற்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.