துப்பாக்கி முனையில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வந்த செய்தி தவறானது

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக வெளியான தகவல் தவறானது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இதையடுத்து காஷ்மீர் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பட்காம் மாவட்டம் காஜிபுரா பகுதியில் புகுந்த 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல், ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் தவறானது என்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் ராணுவ வீரர் முகமது யாசின் பட்காமில் பாதுகாப்பாக உள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version