சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்: 'பேஸ் ஆப்' செயலி உதவியால் சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினர்

சீனாவில் 3 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ செயலி தற்போது பிரபலமாகி வருகிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் பலரும், ‘பேஸ் ஆப்’ மூலம் தங்களது புகைப்படங்களை இளமை வயதிலும், வயதான தோற்றத்திலும் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவில் 3 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங், 2001-ம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். யு வீபெங்கை அவரது பெற்றோர் 18 ஆண்டுகளாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடத்தப்பட்ட சிறுவனை ‘பேஸ் ஆப்’ செயலியை பயன்படுத்தி கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, யு வீபெங் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி அவரை கண்டுபிடித்தனர். பின்னர் டி.என்.ஏ. சோதனை நடத்தி அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 18 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகனை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்ப்பவரை கண்கலங்க செய்தது.

Exit mobile version