சென்னை கோயம்பேட்டில் தரமற்ற தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற மற்றும் காலாவதியான தண்ணீர் அடைக்கப்பட்ட கேன்கள் மூலம் விற்பனைக்கு வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே இன்று காலை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 7 மினி வேன்களில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர். சோதனை செய்யப்பட்ட 680 கேன்களில் 180 கேன்கள் காலாவதி மற்றும் தரமற்ற தண்ணீரை கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலியான லேபிள்கள் ஒட்டப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இந்த கேன்கள் அனைத்தும் சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், சோழவரம், ரெட்ஹில்ஸ், பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தண்ணீர் கேன்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு விசாரணைக்கு கொண்டு சென்றனர்.