எதிர்ப்பார்ப்புகளுடன் கூடும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- சுமுகமாக நடைபெறுமா?

எதிர்ப்பார்ப்புகளுடன் கூடுகிறது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர். இந்தமுறை அரங்கில் எந்தெந்த விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். அவைகளை மத்திய பாரதிய ஜனதா அரசு எப்படி கையாள போகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் ரஃபேல், ஆந்திர சிறப்பு அந்தஸ்து, முத்தலாக் விவகாரம் என பல்முனை தாக்குதலை தொடுத்து அவையை முடக்கினர் எதிர்க்கட்சிகள்.அனைத்திற்கும் உச்சபட்சமாக நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதேசமயம் தற்போது நடைபெற இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரை முழுவதும் முடக்குவதற்காக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிபிஐ இயக்குநர் விவகாரம், எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளில் சோதனை, விவசாய கடன் தள்ளுபடி, மேகேதாட்டு விவகாரம், கஜா புயல் நிவாரணம், காவிரி மேலாண்மை ஆணைய நிரந்தர தலைவர் நியமன கோரிக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை  எதிர்க்கட்சிகளிடம் இருக்கும் புதிய வரவுகள்.
சிபிஐ இயக்குநர்கள் பஞ்சாயத்து நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து எதும் பேச முடியாது என மத்திய அரசால் நழுவி விட முடியும். ரபேலுக்கும் இதே ஃபார்முலாவை பயன்படுத்தலாம்.
ஆனால் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான மேகேதாட்டு விவகாரத்தை கையாள்வது மத்திய அரசுக்கு சற்று சவாலான ஒன்று. ஏனெனில் அது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு விவகாரம் மட்டும் அல்ல, பா.ஜ.க.வின் வாக்கு வங்கிக்கு தொடர்புடையது.
டெல்லியில் ஒன்றுக்கூடிய விவசாயிகளால் தேசிய அரசியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறது விவசாய கடன் தள்ளுபடி. இந்த பிரச்சனையை அவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பினால் வேளாண் பொருட்களின் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டக்கூடும்.
மறுபுறம் 5 மாநில சட்டபேரவை தேர்தல் பிரசாரத்தின்போது ரபேல், ரபேல் என முழங்கினார் ராகுல். ஆதலால் இந்தமுறையும் கொஞ்சமும் அசராமல் ரஃபேல் விவகாரத்தை அவையில் மீண்டும் காங்கிரசார் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அப்போதும் இப்போதும் ஒரே நிலையில் தான் இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அவர் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் ஆந்திர சிறப்பு அந்தஸ்து. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட ஏதுவாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்த காத்துக்கொண்டிருக்கிறது சிவ சேனா.
இதுவிர பிராந்திய கட்சிகளும் தங்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எழுப்ப தயாராக உள்ளனர். இதனால் கூட்டத்தொடர் சுமூகமாக முடியுமா?? காலமே பதில் சொல்லும்.

Exit mobile version