தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டப்படுவதாகத் தெரிவித்தார்.
தமிழ் பத்திரிகை உலகில் மகத்தான புரட்சிகளை செய்த சாதனையாளர் மறைந்த சி.பா ஆதித்தனாரின் 116-வது பிறந்த தினமான இன்று, அவரது நினைவுகளை போற்றி வணங்குவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாமரமக்களுக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வமூட்டியவர் சி.பா.ஆதித்தனார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதழியல் முன்னோடி, பத்திரிகையாளர், தமிழ்ப்பற்றாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் சி.பா.ஆதித்தனார் என்றும், அவரது தமிழ்ப்பற்றையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குவதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.