நீண்டகால நடைமுறைகளுக்குப் பிறகு, பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
Britian Exit என்பதன் சுருக்கமே பிரெக்ஸிட் ஆகும். பிரிட்டன் வெளியேறுதல் என்பதே இதன் அர்த்தம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது தொடர்பான விஷயம் என்பதால் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 28 நாடுகள் சேர்ந்த ஒரு அமைப்பு ஆகும். இதில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளோடு பிரிட்டனும் ஒரு உறுப்பு நாடாக உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்காக இந்த ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனி நாடாளுமன்றம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 19 நாடுகள் யூரோவைப் பொதுப் பணமாகப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் புதிய குடியேற்ற மக்களை வரவேற்கின்றன. ஆனால், பிரிட்டனின் சில தலைவர்கள் புதிதாகக் குடியேறும் மக்களால் தங்களது கலாசாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதினர். இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான ஒரு வாக்கெடுப்பு 2016 ஜூனில் பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்டது இதில் 71.8% மக்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 51.9% மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிலிருந்து பிரெக்ஸிட் சர்ச்சை தொடங்கியது. இதனால் அன்றைய பிரதமர் கேமரன் பதவி விலகினார்.
அடுத்துவந்த பிரதமர் தெரசா மே-வினால் சுமுகமான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியவில்லை, அவரது ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் அவரும் பதவி விலகினார். பின்னரே இப்போதுள்ள பிரதமர் போரீஸ் ஜான்சன் பதவி ஏற்றார்.
தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற ஒப்புதலை பெற்ற பின்னர், பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் தனது ஒப்புதலை அளித்தார்.
இந்நிலையில்தான், ஐரோப்பிய நாடாளுமன்றமும் பிரெக்சிட் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் இறுதி ஒப்புதலை மட்டும் பெற்றுவிட்டால், பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடலாம். இன்று நள்ளிரவில் இந்த பாராளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒரு நாடு வெளியேறுவது இதுவே முதன்முறை என்பதால், பிரெக்ஸிட் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.