20 தொகுதிகளில் மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

20 தொகுதிகளில் மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதை தெரிவித்தார். தமிழக மக்களின் உரிமைகளை காப்பதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.  தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறைப்பதற்காக அமைச்சர்கள் மீது திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவித்த முதலமைச்சர், பாலாற்றில் அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்டாலின் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விலையில்லா பொருட்களால் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்கார் பிரச்சனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் உறவினர் பலரும் இலவச திட்டங்களால் பயனடைந்துள்ளவர்கள்தான் என்று கூறினார்.

மேலும், கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, கமல்ஹாசனின் நடிப்பு அரசியலில் எடுபடாது என்றும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். தன் பிரச்சனையையே தீர்க்க முடியாமல் வெளிநாடு செல்வதாக கூறிய கமல், மக்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பார் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.  இலங்கை பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பது, ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார்.

Exit mobile version