ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் அதிபராக இருந்த ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அவரது கட்சியும் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து எமர்சன் மங்காக்வா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, கடந்த 30ஆ ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் அதிபர் எமர்சன் மங்காக்வாவின் ஆளும் ஜானு- பி.எப். கட்சி வெற்றி பெற்று 109 இடங்களை கைப்பற்றியது. இன்னும் 30 இடங்களில் வென்றால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை ஆளும் கட்சி பெறக் கூடும். நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி, 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமர்சன் மங்காக்வா அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.