மின்னஞ்சலை குறி வைக்கும் ஹெக்கர்கள் உஷார் ரிப்போர்ட்…!

12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூகுள் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான செய்தி உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்களை, மூன்றாவது நபர்கள் ஊடுருவி திருடும் சம்பவங்கள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன.

இந்த சூழலில் இன்னொரு அதிர்ச்சியாக, உலகின் முதல்நிலை மின்னஞ்சல் நிறுவனமான கூகுளின் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்துபவர்களின் கணக்குகளிலும் மூன்றாம் நபர்கள் ஊடுருவ முயன்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மின்னஞ்சலுக்கு ஹேக்கர்கள் ஒரு போலி மின்னஞ்சலை அனுப்பி உள்ளனர். கூகுள் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதைப் போன்ற தோற்றத்தில் இருந்த அந்த மின்னஞ்சல் ‘கடவுச் சொல்லை உள்ளிடவும்’ என்று வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளது. அதனை நம்பி கடவுச் சொல்லை உள்ளிட்டவர்களின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர்.

இது தொடர்பான எச்சரிக்கையை தற்போது கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி உள்ளது. இந்த எச்சரிக்கை இந்தியாவில் சுமார் 500 பேருக்கும், அமெரிக்கா, கனடா, தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ள தலா ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் கூகுள் சேவையைப் பயன்படுத்துபவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.

சமுதாயத்தில் பிரபலமாக உள்ள அரசியல்வாதிகள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள் போன்றோரின் கூகுள் கணக்குகளைப் பாதுகாக்க ‘அட்வான்ஸ் புரொடக்-ஷன் புரோகிராம்’((advance protection programme)) என்ற உயர்பாதுகாப்புத் திட்டம் ஒன்றை கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. தங்கள் விவரங்களைப் பாதுகாக்க விரும்பும் பிரபலங்கள் விரைந்து இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்றும், அப்போது
அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூகுள் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்குக் கூட 100 சதவிகித பாதுகாப்பை கூகுள் நிறூவனத்தால் வழங்க முடியுமா? – என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர் ஐ டி துறையைச் வல்லுநர்கள்.

Exit mobile version