தமிழ் திரையுலகில் ஒரு ஆங்கிலேயர் அழகான தமிழ்ப் படங்களை இயக்கி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் என்றால், அவர் எல்லீஸ் ஆர் டங்கன்-ஆக தான் இருக்க முடியும். திரைத்துறையின் மாமேதையான அவரின் பிறந்த தினம் இன்று.
1909 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த எல்லீஸ் ஆர் டங்கன், பள்ளிப்பருவத்தில் இருந்தே தனது கேமராவின் வழியே பல அரிய காட்சிகளை படமாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு வந்த எல்லீஸ் ஆர் டங்கனை, தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளாரான ஏ.என்.மருதாசலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தார். எஸ்.எஸ்.வாசன் எழுதிவந்த தொடர்கதையை தனது முதல் சினிமாவாக இயக்கினார் எல்லீஸ், அதுவே எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள் நடிப்பில் ‘சதி லீலாவதி’ என வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் மாபெரும் வெற்றிக் கொடி நாட்டிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோர் இந்தப் படத்தின் மூலமே அறிமுகமாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எல்லீஸ் இயக்கிய ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. அம்பிகாபதியாக நடித்த எம்.கே.தியாகரஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். ஒரு காட்சியின் ஷாட்களைப் பாத்திரங்களின் உணர்ச்சி, அதன் நகர்வுகளை Shot Divisions முறையில் படம் பிடித்து தொகுத்த விதத்தில், அம்பிகாபதி ஒளிப்பதிவு இலக்கணம், படைப்பாற்றல் ஆகிய இரண்டின் சிறந்த கலவையாக இன்றளவும் மெச்சப்படுகிறது.
சாகுந்தலா, காளமேகம், மீரா, பொன்முடி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பல நவீனங்களை புகுத்திய அவரது இறுதிப் படமாக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான ‘மந்திரிகுமாரி’ படம் அமைந்தது.
கோணங்களால் பாத்திரங்களின் உணர்ச்சியைப் பார்வையாளர்கள் உணரும்படி காட்சிப்படுத்தும் எல்லீஸ், க்ளோஸ் அப் காட்சிகளை அதிக வலிமையுடன் பயன்படுத்தினார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தை துணிந்து காட்சிப்படுத்தினார். தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ‘எ கைடு அட்வெஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்ட எல்லீஸ், 2001-ல் காலமானார்.