புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்தவர் ரவுடி குமார் என்கிற சாணிக்குமார் ஆயுள் தண்டனை கைதியான இவர் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானர். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி வானரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற சாணிக்குமார் மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டு அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முதலியார்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப், குமரன், சதீஸ், சந்திரன், ரெனோ, கணேஷ், பீட்டர், முருகன் உட்பட 8 பேரை கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக சாணிக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் அவர்களை பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.