சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த எகிப்திய அரசர் இரண்டாம் செனுஸ்ரட்டின் பழமையான பிரமிடுக்குள் பார்வையாளர்கள் நுழையலாம் என்ற அனுமதியை நேற்று வழங்கி உள்ளது எகிப்திய அரசு. பார்வையாளர்களைக் கடந்த காலத்திற்குள் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லும் அந்தப் பிரமிடு குறித்து பார்ப்போம் இந்தத் தொகுப்பில்…
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எல்-லாஹூன் பிரமிடு. கி.மு.19ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 12 ஆம் வம்சத்தைச் சேர்ந்த அரசர் இரண்டாம் செனுஸ்ரட்டின் மறைவை அடுத்து அவருக்காகக் கட்டப்பட்ட பிரமிடு இது.
106 மீட்டர் நீளமும், 48.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமிடு 45 டிகிரி சாய்வாகக் கட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த மலையை அடித்தளமாகக் கொண்டு அதன் மீது கருங்கற்களாலும், பின்னர் கருங்கல்மேல் வெயிலில் உலர்ந்த களிமண் கற்களாலும் இது கட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் செனுஸ்ரட்டின் பிரமிடு கடந்த 1889 ஆம் ஆண்டில் ஆங்கிலேயத் தொல்லியல் நிபுணர் வில்லியம் பெட்ரியால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் கழித்து, கடந்த 1989 ஆம் ஆண்டில் இதனை மக்களுக்காகத் திறக்க முயற்சி நடந்தது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்னர் பிரமிடைச் சீரமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் தொடங்கப்பட்டு, பிரமிடின் உள்ளே பார்வையாளர்களுக்காக மரப்படிகள் அமைக்கப்பட்டு, மேற்கூரையில் உடைந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பான சுற்றுலாத் தளமாக இப்போது மாற்றப்பட்டு உள்ளது.
சிகப்பு சலவைக்கல்லால் ஆன சவப்பெட்டியும், ஆண்களுக்கான சில முகமூடிகளும், அரசர்களுக்கு உரிய சில பொருட்களும், சில பதப்படுத்தப்பட்ட உடல்களும் இந்த பிரமிடின் உள்ளே உள்ளன. ஆனால் அரசர் இரண்டாம் செனுஸ்ரட்டின் பாடம் செய்யப்பட்ட உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எகிப்தில் 2000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த பரோ அரசர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதார நிலை, அக்கால கலைத்திறம் அனைத்தையும் மக்களுக்குக் கூறுவதாக உள்ளதால், இரண்டாம் செனுஸ்ரட்டின் பிரமிடு வெளிநாட்டுப் பார்வையாளர்களையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும் என்று எகிப்து அரசு கருதுகிறது.