செந்துறை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

செந்துறை அருகே நடைபெற்ற கல்வி சீர்வரிசை வழங்கும் விழாவில் பெற்றோர்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 35,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள நாகல்குழி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு, நாகல்குழி கிராமத்து மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் திருவிழா நடைபெற்றது. அருகில் உள்ள கோயிலில் இருந்து பூஜை செய்யப்பட்டு சீர்பொருட்களை அங்கிருந்து நடந்தவாறு தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வந்தனர்.

இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான டேபிள் சேர் , கம்ப்யூட்டர், பீரோ, நாற்காலிகள், தலைவர்கள் புகைப்படங்கள் , மின்விசிறி, மின் விளக்கு, குழந்தைகளுக்கு தேவையான குடிநீரை சுத்திகரிக்கும் கருவி மற்றும் பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அகலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை ஊக்கப்படுத்தும் வகையில் பெற்றோர்கள், ஊர் மக்கள் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க கல்வி சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துவந்து பள்ளிக்கு வழங்கினர். தேசத் தலைவர்கள் புகைப்படங்கள், குடிநீர் பாத்திரங்கள், மின்சாரத்தில்  இயங்கும்  கடிகாரம், மேசை, நாற்காலிகள், வேதிப்பொருள்கள் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

Exit mobile version