34-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக 19-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி என்ற ஒரே சீரான வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை நெறிப்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில், அவ்வப்போது ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டத்தை வரும் 19-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அதில், ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு, தலைமை தேர்தல் ஆணையரின் அனுமதி பெற வேண்டி இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடித்ததை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

Exit mobile version