30 ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை சந்திக்கும் பாறுக் கழுகுகள் – சிறப்பு தொகுப்பு

உலகில் உள்ள பறவைகளில் எல்லாம் மிக வலிமையானவை கழுகுகள். கழுகு இனங்களில் மிக வலிமையானவை பாறுக் கழுகுகள் என்று அழைக்கப்படும் பினந்தின்னிக் கழுகுகள், தற்போது அழிவின் விளிம்பில் உள்ள துயரத்தை அறிவோம் இந்த சிறப்புத் தொகுப்பில்…

இமய மலையின் பனியிலும் தார் பாலைவனத்தின் மணலிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக தாக்குப்பிடித்து வாழ்ந்த பாறுக் கழுகின் 3 இனங்கள், கடந்த 30 ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை சந்தித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளியன்று தெரிவித்து உள்ளது இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

1980களின் தொடக்கத்தில் இந்தியாவில் 3 வகை பாறுக் கழுகுகளும் மொத்தம் 4 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. இப்போதோ அவை மொத்தம் 19 ஆயிரம் மட்டுமே உள்ளன. இவற்றில் 12 ஆயிரம் நீண்ட அலகுடைய பாறு கழுகுகளும், 6 ஆயிரம் வெள்ளை முதுகுப் பாறு கழுகுகளும், ஓராயிரம் மெல்லிய அலகுடைய பாறுக் கழுகுகளும் அடக்கம்.

இந்தியாவில் பாறுக் கழுகுகள் திடீரெனக் குறைந்துவருவது கடந்த1990களில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணம் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வந்த நிலையில், 2003 ஆம் ஆண்டில்தான், ‘கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியான டைக்குளோஃபினாக் மருந்து, பாறுக் கழுகுகளுக்கு சிறுநீரக செயலிழப்பை உண்டாக்குகின்றது’ என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய அரசு இந்த மருந்தை 2006ல் தடை செய்தது, பாறுக் கழுகுகளுக்குத் தீங்கு பயக்கும் மற்றொரு மருந்தான ‘கீட்டோபுரோஃபேன்’ மருந்தும் பின்னர் தடை செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை ‘சர்வதேச பாறுக் கழுகுகள் விழிப்புணர்வு நாள்’ என்று அறிவிக்கபட்டது.

ஆனாலும், கால்நடைகளுக்கு சில மருந்துகள் அதிக அளவாகக் கொடுக்கப்படும் போது, இன்றும் அவை பாறுக் கழுகுகளின் இறப்புக்கு காரணமாக உள்ளன.

இதனால் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கவில்லை. இதனால் பாறுக் கழுகுகளை பெருக்குவதற்காக நாடெங்கும் 8 வெவ்வேறு மாநிலங்களில் இனவிருத்தி மையங்களையும் இந்திய அரசு அமைத்து உள்ளது. கழுகுகளை – காட்டின் துப்புறவுத் தொழிலாளர்கள் என்று சூழலியலாளர்கள் அழைக்கின்றனர். அதிக கழுகுகளுள்ள காடு அதிக சுத்தமான, சுகாதாரமான காடாக இருக்கும். மேலும், உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ளவை பாறுக் கழுகுகள் என்பதால் அவற்றின் அழிவு சூழலியல் சமநிலையையும் பாதிக்கும். இதனால் ‘பாறுக் கழுகுகள் நாளை இந்தியாவின் வானில் இருந்து மறைந்து போனால், மனிதர்கள் இந்தியாவின் மண்ணில் இருந்து மறையும் நாள் அதன் பிறகு விரைவிலேயே வந்துவிடும்’ என்று எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

Exit mobile version