இந்த ஜல்லிகட்டை தெரியுமா? – சலக் எருது ஜல்லிக்கட்டு.

பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர். – கலித்தொகை                        

     ஜல்லிக்கட்டு.. இதை அறியாதவர்கள் உலகளவில் இன்று எவரும் இல்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை. விதவிதமா ஜல்லிக்கட்டுகள் உண்டென்பதையும் கேள்விப்பட்டிருக்கும் நாம் அவைகளை அறிந்துகொள்ளத் துளியும் முற்பட்டதில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மை. அப்படி மறக்கப்பட்ட இந்த சலக் எருது ஜல்லிக்கட்டு, கிட்டத்தட்ட காளைக்கும் காளையர்க்கும் இடையான ஒரு பலப்பரீட்சை.  காலமாற்றத்தால் இழந்துவிட்ட தமிழரின் பெருமைகளில் இதுவும் ஒன்றென்றால் அது மிகையில்லை.

விளையாடும் முறை:

பொதுவான ஜல்லிக்கட்டு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட காளையும்,ஜல்லிக்கட்டு வீரரும் களத்தில் சூரியனை பார்த்தவண்ணம் நிறுத்தப்பட்டு,இறைவனை வணங்கி போட்டி ஆரம்பமாகும். முதலில் மாடுபிடி வீரர் அவருக்கு பின்னே காளை காளையின் பின்னே காளையின் உரிமையாளர்கள் என ஒருவர்பின் ஒருவர் நிற்பர். காளையின் கொம்புகளுக்கிடையில் 6 அடி நீள கழி(கம்பு) ஒன்று பிணைத்து வைக்கப்படும். கம்பின் மறுமுனை வீரர் கையில் கொடுக்கப்படும் .இப்போது போட்டி என்னவென்றால் வைத்த கம்பு கீழே விழாமல் பிடித்த பிடியையும் விடாமல் எல்லை வரை ஓடி செல்லவேண்டும் அந்த வீரர். மாட்டின் உரிமையளர்கள் பின்னிருந்து மாட்டை விரட்ட, பின்னே திரும்பாமல் மாட்டின் வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறே ஓட வேண்டும். அதிவேகமாக ஓடினால் கம்பு தவறி விடும். வேகம் குறைந்தால் காளையிடம் மிதிபட நேரிடும்(அட). கிட்டத்தட்ட ஆகவும் முடியாத சாகவும் முடியாத நிலை போல. இப்போது இவருக்கு இருக்கும் ஒரே வழி கம்பு உந்தப்படும் வேகத்தை வைத்து காளையின் வேகத்தை கணக்கிட்டு கொண்டே அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டும்.

தூரமென்றால் 10 அடி 20  அடி தூரம் அல்ல. குறைந்தது 1000 அடி தூரம் இவர் ஓட வேண்டும் அப்படி ஓடி வெற்றி பெரும் வீரர் அந்த சுற்றுவட்டாரத்தின் பெரும் ஆற்றல் வாய்ந்தவராக கருதப்படுவார். அவருக்கு ஊர்கூடி மரியாதை செய்து கொண்டாடி மகிழும். மஞ்சள் நீர் தெளிப்பது,சந்தனம் இடுவது குங்குமம் இடுவது என ஒரே அதகளம்தான்.

இன்னும்சொல்லப்போனால்  அன்றைய கொண்டாட்டங்களின் கதாநாயகன் அவர்தான். இளைஞனின் ஆற்றலுக்கும் மதிநுட்ப ஆய்விற்கும் சலக் எருது ஜல்லிக்கட்டு நடத்தபட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிற உண்மை. இளைஞருக்கு சலக் எருது இப்படி நடத்தப்படுவதைப் போலவே எருதுகளுக்கு என்றும் தனியாக சலக் எருது நடத்தப்படுவதும் உண்டு.

காளைகளுக்கான சலக் எருது:

இதுவும் ஓடி இலக்கை தொடுவது போன்ற போட்டிதான்.காளைகளுக்கான ரன்னிங் ரேஸ். குறிப்பிட்ட ஒரு எல்லையில் இருந்து மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை விரட்டி விடுவர். மறு எல்லையில் இருக்கும் மல்லுத்துணி என்கின்ற துணி இடப்பட்ட எல்லையை அடையவேண்டும்.

இந்த தூரம் குறைந்தது 2 கி.மீ முதல் 4 கி.மீ வரை இருக்கலாம். முதலில் வந்துசேரும் காளை வென்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்க்கு பரிசும் மரியாதையும்  வழங்கப்படுகிறது. காளைகளில் சிறந்த ஆற்றலுடைய காளையை தேர்வு செய்ய இந்த வகையான சலக் எருது போட்டிகள் நடத்தபட்டிருக்கின்றன. சலக் எருது போட்டிகளில் பங்குபெறும் காளைகள் சலக் எருது என்ற தனிப்பெயராலேயே அழைக்கப்படுகின்றன.ஒரு ஊரில்  ஆற்றல்மிக்க சலக் எருது வைத்திருப்பவர் அவ்வூரின் நல்ல மதிப்பை பெறுபவராகிறார்..

சான்று:

ராசகம்பளத்து நாயக்கர் மக்களின் தாலாட்டு பாடல்களில் இன்றளவும் சலக் எருது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

“உன்மாமன் சலக் எருது மலையேறி மேயுதுன்னு

உங்கப்பன் சலக்கெருது ஆத்துப்பக்கம் மேயுதுன்னு நீ

அவசரமா வா பசுவே அருமைமகன் பால்குடிக்க“  

                                            – ராச கம்பளத்தார் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு

 

எங்கே காணலாம்:

திண்டுக்கல் மாவட்டத்தை தவிர வேறு இடங்களில் இது காண்பதற்கு அரியது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கம்பளத்து நாயக்கர் இன மக்கள் மட்டுமே இதை நடத்தி வந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, கோடாங்கிபட்டி போன்ற ஊர்களில் அவ்வபோது கிராமதேவதைக்கு விழா எடுக்கிறபொழுது சலக் எருது நடத்துவர். ஊர்த்தலைவர் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லுக்கு விழா எடுக்கிறபோதும் கூட சலக் எருது நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மற்ற பகுதிகளில் சலக் எருது நடத்துவது அரிதிலும் அரிது.

என்னதான் ஆனது:

தமிழனின் பராக்கிரமம் சொல்லவும், வீரத்திற்கு பெரும் எடுத்துகாட்டாகவும் விளங்கிய இந்த ஜல்லிக்கட்டு எங்கேதான் போனது இப்போது? என்னதான் ஆனது?

ஆய்வு செய்ய ஆசை கொண்டு பெரியவர்களிடம் கேட்டபோது அதிக உயிர்பலிகளாலும், தோற்றவர் வென்றவர் இடையே நிகழ்ந்த காழ்ப்பு

பூசல்களாலும் இதை நடத்த யாரும் ஊக்குவிப்பதில்லை என்றும், அதுபோக இன்றிருக்கும் இளைஞர்கள் அதற்கு தயாராக இல்லை என்றும் மனம் திறக்கிறார்கள்( என்ன கொடும சார் இது ). இருந்தாலும் ஒன்று நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது.என்னவென்றால் இந்த ஜல்லிக்கட்டு அழிந்து போனது என்றெல்லாம் வருத்தப்பட வேண்டாம். முற்றுமுழுதாக யாரும் மறக்கவில்லை. தொடர்ந்து நடத்தப்படாததால் புதிய இளைஞர்களுக்கும் மக்களுக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கிறது என்பதுதான் இந்த சலக் எருது ஜல்லிக்கட்டின் இப்போதைய நிலைமை.(அட ஆமால்ல)

 

இப்படியான விளையாட்டுகள் விளையாடி ஒட்டுமொத்த உலகமும் மெய்சிலிர்க்க வாழ்ந்த தமிழின இளைஞர்கள் இன்று இதுபோல விளையாட முடியாதுதான். அனால் அதை ஒரு சமாதானமாக்கி செல்போன்களில் மூழ்கி கிடப்பதை விட்டு ஆடுகளங்களை நோக்கி இளையசமூகம் கிளம்பும் பட்சத்தில் தமிழரின் பெயரும் பெருமையும் உலகளவில் உயரும் என்பது மட்டும் திண்ணம்.

 

Exit mobile version