குட்கா விற்ற திமுக பிரமுகரை விடுவிக்க கோரி காவலர்களுக்கு திமுகவினர் மிரட்டல்

பொள்ளாச்சி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என திமுக நிர்வாகிகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே, நெகமம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த மளிகைக் கடையை கண்காணித்த போலீசார், அங்கு குட்கா விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். மேலும், அந்த கடையில் இருந்து நான்கரை கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, மளிகைக்கடை உரிமையாளரான திமுகவை சேர்ந்த தங்கவேல் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையறிந்து திமுக நிர்வாகிகள், குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவரை விடுவிக்க முடியாது என்று காவலர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ளாத திமுக நிர்வாகிகள் மேலிடத்தில் பேசி விடுவிக்க வைப்பதாக மிரட்டிச் சென்றனர். இதனால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Exit mobile version